Wednesday, December 25, 2019

3) வாசித்தால் வாழ்வெல்லாம் நிம்மதி


மண்ணில்
மகத்தானது
மனித வாழ்க்கை

அந்த
வாழ்க்கையை

அர்த்தம் உள்ளதாக்க
ஆனந்த மயமாக்க
அமைதி நிறைந்ததாக்க

மண்ணில் பிறந்த
ஒவ்வொருவரும்
கற்க வேண்டியது

வாழ்க்கைக் கல்வி


அதற்கான
ஒரே வழி

பள்ளி
பல்கலைக் கழகப்
பாட நூல்களோடு

நூலகத்தில் உள்ள
நூல்களையும்

மாணவப் பருவத்தில்
மட்டுமல்ல
மாணவப் பருவம்
முடிந்தாலும்

வாழ்நாள் முழுதும்

வாசகனாய் இருந்து
வாசிப்பது ஒன்றே


ஏனெனில்...

பாட நூல்கள்
படிப்பதன் நோக்கம்
வகுப்பில் தேர்ச்சி

பொது நூல்கள்
படிப்பதன் நோக்கம்
வாழ்க்கையில் தேர்ச்சி


வாசிக்காமல்
வளர்வதில்லை
அறிவு

வாசிக்காத
நாட்கள் எல்லாம்
சுவாசிக்காத
நாட்களே


உயிரோடு
வாழ்வதற்குக்
காற்றைச் சுவாசி

முறையோடு
வாழ்வதற்கு
நூலை வாசி



ஆம்...
அதில்

உண்மை
உறைந்திருக்கிறது

நன்மைகளும்
நிறைந்திருக்கிறது

நூலளவே ஆகுமாம்
நுண்ணறிவு

அறிவை வளர்க்கும்
ஆலயமான
நூலகம்

அறிவு செல்வத்தின்
சேமிப்புக் கிடங்கு

இறந்த காலத்தையும்
நிகழ் காலத்தையும்
இணைத்திடும்
சிந்தனைப் பாலம்

எதிர் காலத்தை
கணித்துச் சொல்லும்
காலக் கண்ணாடி

அங்குள்ள
புத்தகங்கள்

நாம்
அறியாத உலகுக்கு
நம்மை
அழைத்து செல்லும்
அதிசயச் சிறகுகள்

ஞானம் தரும்
போதி மரங்கள்

கருத்துகள்
பிரசவிக்கும்
பிரசவ அறைகள்

வரலாறு
உயிர்தெழும்
உன்னத இடங்கள்

வழி
ஊருக்குப்
பாதை காட்டும்

நூல்
வாழ்க்கைக்குப்
பாதை காட்டும்

கல்வியின்
முதற்படி
எழுத்தறிவு

தொடர்ந்து
படிப்பதன் மூலமே
படிப்படியாக
முன்னேற முடியும்


மனிதனுக்கு
இயல்பாய்
மூளை வளரும்

வாசிப்பால்
அறிவு வளரும்

எரிந்து
கொண்டிருக்கும்
விளக்கே

வெளிச்சத்தைக்
கொடுக்கும்
பிற
விளக்குகளையும்
ஏற்றி வைக்கும்

உடலுக்கு
உடல் பயிற்சி
மனதிற்கு
நூல் வாசிப்பு

வாசிப்பு
மனிதனின்
சுவாசிப்பானால்

அவன்

வாழ்வெல்லாம்
நிம்மதி



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் வாசித்தால் வாழ்வெல்லாம் நிம்மதி

Tamil Literature For Lifelong Peace, Read.




No comments:

Post a Comment